நள்ளிரவில் ஓபிஎஸ் நடத்திய திடீர் ஆலோசனை.. பண்ருட்டி ராமச்சந்திரன் முக்கிய அறிவிப்பு
அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்த பிறகு ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு சரிந்து வருகிறது. இந்நிலையில் பாஜகவுடன் கைகோர்த்துள்ள ஓபிஎஸ் , பிரதமராக மோடி மீண்டும் தேர்வு செய்யப்படுவார் என்று தொடர்ந்து தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஆதரவாளர்களுடன் நள்ளிரவில் ஆலோசனை நடத்திய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செவல்வம், தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் மார்ச் 10 ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை விருப்ப மனு அளிக்கலாம் என்று அறிவித்துள்ளார்.
நேற்று இரவு 10.15 மணியளவில் தொடங்கிய ஆலோசனை நள்ளிரவு 12.30 மணி வரை நடைபெற்றது. அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் அணி சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனு பெற உள்ளதாகத் தெரிவித்தார். தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்கள், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 10 ஆயிரம் ரூபாயை செலுத்தி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், விண்ணப்பம் அளித்த நபர்களிடம் மாலை 6 மணி முதல் நேர்காணல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல பாஜக.வுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த ஏழு பேர் கொண்ட குழுவை அமைத்து ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். இந்தக் குழுவில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன்,ஜே.சி.டி பிரபாகர், தர்மர், கு.ப. கிருஷ்ணன், புகழேந்தி, மருது அழகுராஜ் ஆகியோர் இடம்பிடித்து உள்ளனர்.
பாஜகவுடன் எத்தனை தொகுதிகளை கேட்டுப் பெறப்போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஓபிஎஸ் அணியில் பிரதானமான அதிமுக நிர்வாகிகள் அதிகம் இல்லாதபட்சத்தில் குறைவான அளவே தொகுதிகளை ஒதுக்க பாஜக முடிவெடுக்கும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக