திங்கள், 11 மார்ச், 2024

உச்ச நீதிமன்ற உத்தரவால் பொன்முடிக்கு மீண்டும் எம்எல்ஏ பதவி?

உச்ச நீதிமன்ற உத்தரவால் பொன்முடிக்கு மீண்டும் எம்எல்ஏ பதவி?


சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் குற்றவாளி என்ற தீர்ப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், எம்எல்ஏ-வாக தொடரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், தண்டனை வழங்கப்பட்டதால், பொன்முடியின் எம்எல்ஏ பதவி தானாக பறிபோனது.
அத்துடன், திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலகம் கடிதம் எழுதியது.

இதனிடையே, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பொன்முடி தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சூமோட்டோ வழக்கில் அதிக தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக பொன்முடி தரப்பு வாதிட்டது.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பகுஜன் சமாஜ் எம்பி அப்சல் அன்சாரி மீதான வழக்குகளில் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டதையும் பொன்முடி தரப்பு சுட்டிக்காட்டியது.
திருக்கோவிலூர் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதால், அதற்கு முன்னதாக உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து,  சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு வழங்கப்பட்ட மூன்றாண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இவ்வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவியை குற்றவாளி என அறிவித்த உயர்நீதிமன்ற உத்தரவும் நிறுத்திவைக்கப்பட்டது. குற்றவாளி என்ற தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டதால், பொன்முடி திருக்கோவிலூர் எம்எல்ஏ-வாக தொடரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, பொன்முடி தனது எம்எல்ஏ பதவியை திரும்ப பெறக்கோரி சட்டப்பேரவை செயலகத்தை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனுடன், சபாநாயகர் அப்பாவு ஆலோசனை நடத்தினார்.

மேலும், சென்னை செனடாப் சாலையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்திற்கு வந்த பொன்முடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது திமுக மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

இதே போன்று, பொன்முடியின் சொந்த மாவட்டமான விழுப்புரத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். விசிக எம்பி ரவிக்குமாரும் இதில் பங்கேற்றார்.

இதனிடையே நியூஸ் 18-க்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த திமுக வழக்கறிஞர் வில்சன், மீண்டும் அமைச்சராக பொன்முடிக்கு எந்த தடையும் இல்லை என்றார். மேலும், மக்கள் பிரதிநிதிகளின் பதவிகளை பறிப்பதற்கு முன்னால், மூன்று மாதம் அவகாசம் வழங்கும் வகையில், சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அமைச்சர் செல்லூர் ராஜு, பொன்முடியின் தலைக்கு மேல் இன்னமும் கத்தி தொங்கி கொண்டிருப்பதாக கூறினார்.குற்றவாளி என்ற தீர்ப்பும் நிறுத்திவைக்கப்பட்டதால், பொன்முடியின் எம்எல்ஏ பதவி தானாகவே அவருக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஈரோடு மாவட்டத்தில் தடகளப் போட்டிகள் - வீரர் வீராங்கனைகளுக்கு அழைப்பு..!

  ஈரோடு மாவட்டத்தில் நடைபெற உள்ள தடகள போட்டியில் பங்கேற்க வீராங்கனையருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய தடகள சங்கம், இந்திய விளையாட்ட...